இந்தியாவின் புகழ்பெற்ற கோலார் தங்கச் சுரங்கம் (KGF) மூடப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் (JGF) நாட்டின் புதிய தங்க மையமாக உருவெடுக்கிறது. இந்த கண்டுபிடிப்பு இந்திய தங்க உற்பத்தித் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு, ராயலசீமா பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில் இந்த தங்க வளம் கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில், இந்த பகுதியில் மட்டும் சுமார் 50 டன் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தங்க வளத்தின் மதிப்பு ரூ.7,500 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு தனியார் துறையால் நேரடியாக செயல்படுத்தப்படும் முதல் பெரிய தங்கச் சுரங்கமாகும். ஜியோமைசூர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சுமார் ரூ.400 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த திட்டம் 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக ஆண்டுக்கு 800 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆண்டுக்கு 1,000 முதல் 1,500 கிலோ வரை தூய தங்கம் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தினசரி 2,500 டன் தாதுக்களை வெட்டி எடுத்து அதிலிருந்து தங்கம் பிரித்தெடுக்க முடியும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் குர்னூல் மாவட்டம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பணியமர்த்தப்படும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் உள்ளூர் மக்களாக இருப்பார்கள் என்று திரிவேணி எர்த்மூவர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சுரங்கப் பணிகளுக்காக உலகத் தரம் வாய்ந்த இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக Carbon-in-Leach (CIL) எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் தாதுக்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படும். இந்த தொழில்நுட்பம் அதிக துல்லியத்துடனும், திறனுடனும் செயல்படக்கூடியதாக கருதப்படுகிறது.
ஜொன்னகிரி மட்டுமல்லாமல், ராமகிரி, ஜவாகுலா, சிக்குருகுந்தா மற்றும் பிஸ்னாடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுரங்க நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்த பகுதி முழுவதும் இந்தியாவின் முக்கிய தங்க உற்பத்தி மையமாக மாறக்கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் இந்திய தங்க உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தியாவின் ஆண்டு தங்கத் தேவையான 800 முதல் 1,000 டன் அளவுடன் ஒப்பிடுகையில், ஜொன்னகிரி சுரங்கத்தின் உற்பத்தி மிகவும் குறைவானதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், உள்நாட்டு தங்க உற்பத்தி அதிகரிப்பது அந்நியச் செலாவணி சுமையை ஓரளவு குறைக்க உதவும் என கருதப்படுகிறது.
கோலார் தங்கச் சுரங்கத்திற்குப் பிறகு இந்தியாவின் தங்க உற்பத்தித் துறையில் மிகப்பெரிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள ஜொன்னகிரி, எதிர்காலத்தில் ‘JGF’ என்ற பெயரில் புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.