உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள தனியார் பயிற்சி மைய கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லக்னோ நகரின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. அதே கட்டிடத்தில் செல்லப்பிராணி பொருட்கள் விற்பனை கடை உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களும் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ, சில நிமிடங்களிலேயே மளமளவென பரவி கட்டிடத்தின் பல பகுதிகளை சூழ்ந்தது. இதனால் பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் பதற்றமடைந்தனர்.

தீ வேகமாக பரவியதால் பல மாணவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். சிலர் உயிர் தப்புவதற்காக மாடியிலிருந்து கீழே குதித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக தப்பிக்க முயன்ற மாணவர்களின் அலறல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் பல வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடிய பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்தையும் ஆய்வு செய்து உள்ளே சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணிகளின் போது பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்த 4 பேர் லக்னோவில் உள்ள கேஜிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்த பின்னரே தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், கட்டிடத்தின் மேல்தளத்தில் முதலில் தீப்பற்றியதாகவும், பின்னர் அது வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் தெரிவித்தனர். மீட்புப் பணிகளின் போது சில ஜன்னல்கள் உடைக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஐந்து முதல் ஏழு மாணவர்கள் உயிர் தப்புவதற்காக மேல்தளத்திலிருந்து குதித்ததாகவும், அவர்களில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள இந்த சம்பவம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை உணர்த்தியுள்ளது. தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்னோவை உலுக்கிய இந்த கோர தீ விபத்து, பல குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தியதோடு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.