சென்னை: ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ் வார்த்தைகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ் வளர்ச்சிக் கழகம் புதிதாக 22 தமிழ் சொற்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு நவீன சொற்களுக்கு தமிழ் மாற்றுச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியின் பயன்பாட்டை விரிவுபடுத்தவும், புதிய தொழில்நுட்ப மற்றும் சமூகப் பயன்பாட்டு சொற்களுக்கு தமிழில் மாற்று வழங்கவும் ‘சொல் புதிது’ என்ற திட்டத்தை தமிழ் வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 14-வது ஆலோசனைக் கூட்டம் சென்னை நகரில் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் ம. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேராசிரியர்கள் மு. ராமசாமி, இளங்கோவன், தி. கமலி உள்ளிட்ட மொழியியல் மற்றும் தமிழ் ஆய்வுத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு புதிய ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு பொருத்தமான தமிழ் வார்த்தைகள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதியாக 22 சொற்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி, ‘Vegetarian Hotel’ என்பதற்கு ‘காய்கறி உணவகம்’, ‘Non-Vegetarian Hotel’ என்பதற்கு ‘மீன்கறி உணவகம்’ என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ‘Bike Ride’ என்பதற்கு ‘உந்துருளிப் பயணம்’, ‘Bike Tour’ என்பதற்கு ‘உந்துருளி உலா’, ‘Bike Taxi’ என்பதற்கு ‘வாடகை உந்துருளி’ என புதிய சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ‘Hand Band’ என்பதற்கு ‘கைப்பட்டை’, ‘Community Villa Plot’ என்பதற்கு ‘சமூகச் சீர்மனை’, ‘Delimitation’ என்பதற்கு ‘மறு வரையறை’, ‘Digital Hub’ என்பதற்கு ‘மின்னணு இணைய மையம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் பயன்படும் ‘Prebiotic’ என்பதற்கு ‘நன்னுயிரூட்டி’, ‘Prebiotic Atmosphere’ என்பதற்கு ‘உயிர் முன்வளி மண்டலம்’ என்ற தமிழ் வார்த்தைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வித் துறையில் பயன்படும் ‘Review of Related Literature’ என்பதற்கு ‘முன் ஆய்வுப் பார்வை’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘Sense of Serenity’ என்பதற்கு ‘ஆழ்மன அமைதி’ என்ற தமிழ் சொல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ‘Unified Payment Interface (UPI)’ என்பதற்கு ‘தனித்த பணம் வழங்கிடை முகம்’ என்ற தமிழாக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ‘Peri Urban’ என்பதற்கு ‘புறநகர்’, ‘Stand-up Comedy’ என்பதற்கு ‘தனி நபர் நகைச்சுவை’, ‘Black Comedy’ என்பதற்கு ‘கருங்கூத்து நகை’, ‘Sketch Comedy’ என்பதற்கு ‘சித்திரக் குறுநகை’, ‘Surreal Comedy’ என்பதற்கு ‘இயல் மிகை நகை’, ‘Cringe Comedy’ என்பதற்கு ‘கடி நகை’ என தமிழில் புதிய சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் ‘Pub’ என்பதற்கு ‘மயக்க மையம்’ என்ற தமிழ்ச் சொல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இந்த முயற்சி, நவீன உலகில் வேகமாகப் பரவி வரும் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ் மாற்றுகளை வழங்கி, மொழியின் வளத்தையும் பயன்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய தலைமுறையினரிடையே தமிழின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சமூக ஊடகங்களில் தமிழின் இடத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
தமிழ் மொழியை காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து, புதிய சொற்களை உருவாக்கும் இந்த முயற்சிக்கு மொழியியல் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.