பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெற்பயிர்கள் நீரின்றி கருகி வருவதாகவும், இதற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததே காரணம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை பருவ நெல் பயிரிடப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், நிலத்தடி நீரை நம்பி சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மாதத்திற்கு முன்பே நடவு செய்யப்பட்டதால், பயிர்கள் நன்றாக வளர்ந்து நிற்கின்றன.

ஆனால் கடந்த சில வாரங்களாக போதிய அளவு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், நீர் இறைப்பான்கள் மூலம் நிலத்தடி நீரை பாய்ச்ச முடியாமல் வயல்வெளிகள் வெடித்து, நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. உடனடியாக தண்ணீர் பாய்ச்சப்படவில்லை என்றால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

விதை, நடவு, உரம், களையெடுத்தல் ஆகியவற்றுக்காக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ள உழவர்களுக்கு, பயிர்கள் கருகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரமாவது தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வழக்கமாக வழங்கப்படும் குறுவைத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.5,000 இடுபொருள் மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உழவர்களின் எதிர்பார்ப்பு மிக எளிமையானது, அதை அரசு நிறைவேற்ற முடியாதது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.