வாஷிங்டன்: எச்1பி விசா கட்டண உயர்வை அமெரிக்க மாசசூசெட்ஸ் மாகாண பெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

1990ஆம் ஆண்டு அறிமுகமான எச்1பி விசா மூலம் அமெரிக்க நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தி வருகின்றன. இதற்கான கட்டணம் 1,000 டாலர் முதல் 7,500 டாலர் வரை இருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார். இதற்கு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஜனநாயகக் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை எதிர்த்து 20 மாகாண அரசுகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ டி சொரோகின், “நாடாளுமன்ற அனுமதி இன்றி கட்டண உயர்வு சட்டவிரோதமானது. எனவே எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து செய்யப்படுகிறது” என தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு மேல் முறையீடு செய்யும் என அறிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப், “பெடரல் நீதிமன்றங்கள் பெரும் சவாலை அளிக்கின்றன. இது நாட்டின் நலனுக்கு எதிரானது” எனக் கூறினார்.

அமெரிக்க உள்துறை செயலாளர் மார்க்‌வெய்ன் முல்லின், “வெளிநாட்டினரால் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதை தடுக்கவே கட்டண உயர்வு செய்யப்பட்டது” என விளக்கினார்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 65,000 வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் 73 சதவீதம் இந்தியர்கள் ஆவர். இந்த தீர்ப்பை இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் பணியாற்றும் குல்தீப் குமார், “எச்1பி விசா மூலம் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பயன் அடைகின்றன. கட்டண உயர்வு கடுமையாக பாதித்தது. நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்” எனக் கூறினார்.