ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிக்கெட் இன்றி பயணம் செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் அபராதத் தொகையை இரட்டிப்பாக்கி உயர்த்தும் முக்கிய முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. இதன்படி, தற்போது வசூலிக்கப்பட்டு வரும் ரூ.250 அபராதம், வரும் ஜூலை 1 முதல் ரூ.500 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் தினமும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 2.5 கோடிக்கும் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் எண்ணிக்கையை குறைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரயில்வே சட்டம் 1989-ன் விதிகளின்படி, உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது குற்றமாக கருதப்படுகிறது. இதுபோன்ற பயணிகளிடம் பயணித்த தூரத்திற்கான கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது.

ஆனால், டிக்கெட் இல்லாத பயணங்களை மேலும் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களை குறைக்கவும் அபராதத் தொகையை ரூ.500 ஆக உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய விதிமுறையின்படி, ஜூலை 1 முதல் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகள், பயணக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.500 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது தற்போதைய அபராதத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், டிக்கெட் இல்லாத பயணங்களால் ஆண்டுதோறும் கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதேசமயம், விதிமுறைகளை பின்பற்றி டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் கட்டாயம் செல்லுபடியாகும் டிக்கெட்டுடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் அதிக நெரிசல் காணப்படும் வழித்தடங்களில் டிக்கெட் பரிசோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்குமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.