சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தின் குரலாக தமிழ்நாடு அரசு ஒலிக்கக் கூடாது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அடிப்படையிலேயே ஏற்காத நிலையில், அதற்காக புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானதாக அமையும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றமும், 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகள் தமிழ்நாட்டுக்கு சாதகமாக உள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாயும் மாநிலங்களின் ஒப்புதல் இன்றி கர்நாடகம் புதிய அணை கட்ட முடியாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால், ஏற்கனவே தமிழ்நாடு சட்டரீதியாக பெற்றுள்ள உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், மேகதாது அணைக்கு மறைமுகமாக வழிவகுக்கும் சூழல் உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தாலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை திட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதால், புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை பாமக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.