சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மாத நிலவரப்படி தமிழக அரசுப் பள்ளிகளில் 1,214 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உட்பட மொத்தம் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே குடிநீர், கழிப்பறை, போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையும் தொடர்ந்தால் ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புகளை கையாள வேண்டிய சூழல் உருவாகி, அவர்களின் பணிச்சுமை, மனநலம் மற்றும் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கானோர் அரசுப் பணிக்காக காத்திருக்கும் நிலையில், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.