சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற அமர்வின் போது, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் இரு பிரிவுகளாக செயல்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுகவில், தேர்தல் தோல்விக்குப் பிறகு உள்கட்சி அதிருப்தி வெளிப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை எதிர்த்து எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் சமரச முயற்சிகள் மூலம் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்த நிலையில், சி.வி. சண்முகம் தொடர்ந்து விமர்சன குரல் எழுப்பி வருகிறார். மேலும், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியிருப்பதும் கட்சிக்குள் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையை பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர், ராகேஷ் ஆகியோர் வெளிநடப்பில் பங்கேற்காதது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனால், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் தனித்தனி அணிகளாக செயல்படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மேகதாது தொடர்பான தீர்மானத்தில் சட்டப்பேரவை விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். ஜூன் 18-ஆம் தேதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தில் இல்லாத திருத்தங்கள், பின்னர் முதலமைச்சரின் பதிலுரையில் சேர்க்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.