சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடியபோது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு உறுப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் விதி 110-ன் கீழ் விளக்கம் அளிக்க எழுந்தார்.
அப்போது, அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சரின் உரையைத் தடுக்க முயன்ற அவர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து சபாநாயகர், அமைச்சர் விளக்கத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே அமைச்சர் முகம்மது பர்வேஷ் அரசு சார்பிலான விளக்கத்தை சட்டப்பேரவையில் பதிவு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.