நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை ஒன்று நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் பதற்றமின்றி செயல்பட்டு சிறுத்தையை ஒரு அறைக்குள் பூட்டி வைத்ததன் மூலம் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள மாயார் பகுதி வனப்பகுதிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் நோக்கில் சிறுத்தைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு வருவது அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாயார் அஞ்சல் செல்வப்பா காலனி பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவரது வீட்டின் அருகே நேற்று இரவு ஒரு சிறுத்தை சுற்றித்திரிந்தது. வளர்ப்பு நாயை விரட்டியபடி வந்த அந்த சிறுத்தை திடீரென வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்குள் சிறுத்தை நுழைந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் வீட்டின் உரிமையாளர் சிவக்குமார் பதற்றமடையாமல் துணிச்சலுடன் செயல்பட்டார். வீட்டின் ஒரு அறைக்குள் நுழைந்திருந்த சிறுத்தையை கவனித்த அவர், உடனடியாக வெளிப்புறத்திலிருந்து அந்த அறையின் கதவை பூட்டினார். இதனால் சிறுத்தை அறைக்குள் சிக்கிக்கொண்டது.

சம்பவம் குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மசினகுடி வனச்சரக அதிகாரிகள் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பணியாளர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். சிறுத்தை சிக்கியிருந்த வீட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநரின் உத்தரவின் பேரில், துணை இயக்குநர் தலைமையில் சிறப்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. இரவு முழுவதும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கூண்டு மூலம் சிறுத்தையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

பல மணி நேர முயற்சிக்குப் பிறகு சிறுத்தை வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வனப்பகுதிக்குள் உள்ள சீகூர் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனவிலங்குகள் வாழும் பகுதிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை தைரியமாக அறைக்குள் பூட்டி வைத்த வீட்டின் உரிமையாளர் சிவக்குமாரின் செயலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவரது உடனடி முடிவால் உயிரிழப்பு அல்லது காயம் போன்ற பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மாயார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.