மராட்டிய மாநிலத்தில் நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் ஒருவர் உருக்கமான வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தேசிய தேர்வு முகமை மற்றும் விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டன. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த ஜூன் 21-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. 5,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் சுமார் 22.7 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியைச் சேர்ந்த சுஷில் தாகே என்ற மாணவரும் இந்த மறுதேர்வை எழுதியிருந்தார். மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நீண்ட காலமாக தயாராகி வந்த அவர், மறுதேர்வுக்குப் பிறகு மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

தேர்வு கடினமாக இருந்ததாகவும், எதிர்பார்த்தபடி எழுத முடியவில்லை என்றும் அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த சோர்வுடனும் கவலையுடனும் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாணவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது தாயாருக்காக பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், “என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் என் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன். தயவு செய்து என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். அடுத்த பிறவியிலும் உங்கள் மகனாகவே பிறப்பேன். ஆனால் உங்களுக்கு இதுபோன்ற வலியை தரமாட்டேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும், “எனக்கு எதுவும் புரியவில்லை. நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உங்கள் உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்பிய பின்னரே அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் மனநலம் மற்றும் தேர்வு அழுத்தம் குறித்து மீண்டும் ஒரு முறை இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மாணவர்களின் மனநிலையை கவனித்து அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.