சென்னை:

சென்னையில் போக்குவரத்தை மேலும் பாதுகாப்பாகவும் சீராகவும் மாற்றும் நோக்கில், முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள வளைவுகளை (Bell Mouth) மேம்படுத்தும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் 94 சாலை சந்திப்பு வளைவுகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள முக்கிய பிரதான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, விபத்துகளைத் தடுக்க இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் தற்போது 418.56 கிலோமீட்டர் நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகளும், 5,653.89 கிலோமீட்டர் நீளமுடைய 35,978 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இச்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாநகராட்சி சாலைகளுடன் இணைந்துள்ளதால், பல்வேறு சந்திப்புகளில் போக்குவரத்து அழுத்தம் அதிகமாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, சாலை சந்திப்புகளில் உள்ள வளைவுகளை போக்குவரத்து மேலாண்மை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மறுசீரமைக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் வாகனங்கள் திரும்பும் போது ஏற்படும் சிரமங்கள் குறையவுள்ளன.

சாலை சந்திப்புகளில் வளைவுகளை அகலப்படுத்தி, தரமான வடிவமைப்புடன் அமைப்பதன் மூலம் வாகனங்கள் எளிதாகவும் விரைவாகவும் நகர முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், ஆக்கிரமிப்புகளையும் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்கவும், சாலையோர நடைபாதைகளை சிரமமின்றி பயன்படுத்தவும் இந்த திட்டம் உதவும். குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் 94 முக்கிய சாலை சந்திப்பு வளைவுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஈ.வெ.ரா. சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை சந்திப்பு, பிளவர்ஸ் சாலை, புதிய ஆவடி சாலை, வாசு தெரு, அழகப்பா சாலை, டாக்டர் நாயர் சாலை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை சாலை உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் அடங்கும்.

அதேபோல், அசோக் நகர் 10-வது அவென்யூ சந்திப்பு, பி.டி. ராஜன் சாலை, சர்தார் பட்டேல் சாலை – கால்வாய் சாலை சந்திப்பு, திருவான்மியூர் சந்திப்பு, எம்.கே.பி. நகர் சாலை, டேம்ஸ் சாலை, ரிதர்டன் சாலை மற்றும் வேப்பேரி சாலை – ஈ.வி.கே. சாலை சந்திப்பு போன்ற போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் 2026 ஜூலை 15-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக 600 சாலை சந்திப்பு வளைவுகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை நகரின் போக்குவரத்து மேலாண்மை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பு, போக்குவரத்து சீர்மை மற்றும் பாதசாரிகள் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, சென்னை நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.