மதுரை/பழனி, ஜூலை 17:
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
பழனி பகுதியில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலம், கோவில் சொத்து என்பதை மறைத்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீதிமன்றத்தின் அதிரடி கேள்விகள்:
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர், அரசு மற்றும் காவல்துறை தரப்பின் ஒருதலைப்பட்சமான போக்கைச் கடுமையாக விமர்சித்தார்.
-
“இந்த நிலப் பதிவு தொடர்பான பணிகள் ஜூலை 3-ம் தேதியே தொடங்கப்பட்டிருக்கும் போது, அன்று பணியிலிருந்த மற்றொரு சார்பதிவாளர் பாலச்சந்தர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
-
“தவறு நடந்திருப்பது உறுதியானால், தொடர்புடைய இரு சார்பதிவாளர்கள் மீதும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? ஏன் ஒருவரை மட்டும் குறிவைக்கிறீர்கள்?” என்று அரசு தரப்பிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தின் உத்தரவு:
வழக்கின் பின்னணியில் உள்ள நெட்வொர்க் மற்றும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய சிபிசிஐடி போலீசார் மிக ஆழமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் இன்னொரு சார்பதிவாளர் தவறு செய்தது உறுதியானால் அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தினசரி நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை விதித்தார். ஏற்கனவே, முறைகேடாக நடந்த இந்தப் பத்திரப்பதிவை உயர் நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.