அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது இந்திய வம்சாவளி மனைவியான உஷா வான்ஸ் தம்பதியருக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ‘அலெக் நீல் வான்ஸ்’ (Alec Neil Vance) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றும் ஆரோக்கியம் மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உஷா வான்ஸிற்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜே.டி.வான்ஸ், தங்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினருக்கும், வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தம்பதியருக்கு ஏற்கனவே ஈவான், விவேக் ஆகிய இரு மகன்களும், மிராபெல் என்ற மகளும் உள்ளனர்.

வரலாற்றுச் சாதனை அமெரிக்க அரசியலில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் அரிதான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில், பதவியில் இருக்கும் ஒரு துணை அதிபருக்குக் குழந்தை பிறப்பது கடந்த 150 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 1870-ம் ஆண்டு, அப்போதைய துணை அதிபர் ஷூய்லர் கோல்பேக்ஸ் பதவியில் இருந்தபோது அவருக்குக் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

துணை அதிபரின் மகிழ்ச்சி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள ஜே.டி.வான்ஸ், தனது மூத்த குழந்தைகள் புதிய சகோதரனை உற்சாகத்துடன் வரவேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “துணை அதிபராவது அல்லது நான்காவது குழந்தை பெற்றுக்கொள்வது – இதில் ஒன்றுதான் முடியும் என உஷா முன்பே கூறியிருந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டையும் என்னால் அடைய முடிந்தது” என்று நகைச்சுவையுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.