தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் விழா – அமைச்சர் ராஜீவ் தொடங்கி வைத்தார்!

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோலாகலமாக நடத்தப்படும் ‘சாரல் திருவிழா’ இந்த ஆண்டுக்கான கொண்டாட்டங்களுடன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் குற்றால அருவிகளில் சாரல் காற்று வீசும் சூழலில், சுற்றுலாப் பயணிகளைக் ஈர்க்கும் வகையில் இந்த பிரம்மாண்ட விழா கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவிற்குப் பல்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் அவர்கள் இந்த ஆண்டிற்கான சாரல் விழாவை ரிப்பன் வெட்டி முறைப்படி தொடங்கி வைத்தார். இவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் பல அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

5 நாட்கள் நடக்கும் சாரல் திருவிழா:

இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்று, கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகளான கிராமியக் கலைகள், பரதநாட்டியம், கரகம், காவடி, மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

தினசரி நடைபெறும் சிறப்புக் நிகழ்ச்சிகள்:

வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. நாளை (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு கொழு கொழு குழந்தைகள் போட்டியும், அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு யோகாசனம் மற்றும் ஆணழகன் போட்டியும் நடைபெறுகிறது. நண்பகலில் குருவிகுளம் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டாரப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பிற்பகலில் செல்ல நாய்கள் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

மேலும், மாலையில் பல்கிஷ் கிராமியக் கலைக்குழுவின் பல்சுவை நிகழ்ச்சி, செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா குழுவின் பரதநாட்டியம், ஹரிணி வழங்கும் மேஜிக் ஷோ, முத்துச்சந்திரன் கலைக்குழுவின் தோல்பாவை கூத்து போன்ற பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விக்கக் காத்துகொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சிகள், வில்லிசை, கரகாட்டம் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கும் சிறப்புப் பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

சுற்றுலாப் பயணிகள் பெருமகிழ்ச்சி:

வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதால், குற்றாலத்திற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். சாரல் விழாவையொட்டி குற்றாலம் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.