புதுடெல்லி:
கடந்த ஆண்டு டெல்லி செங்கோட்டை எதிரே நிகழ்ந்த அதிர்ச்சி தரக்கூடிய கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவின் துணை அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அன்று டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகில் எதிர்பாராதவிதமாக பயங்கரமான கார் குண்டுவெடிப்புச் சம்பவம் அரங்கேறியது. இந்தத் கோரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். மேலும், சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியதுடன், மத்திய அரசைக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி உத்தரவின் பேரில், இந்தத் தீவிரவாதத் தாக்குதல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த கார் வெடிப்புத் தாக்குதலைத் தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது என்பவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்தச் சதித் திட்டத்துடன் தொடர்புடைய 3 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தரப்பில் 7,500 பக்கங்களைக் கொண்ட பிரம்மாண்டமான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்தச் சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக் குழு கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி ‘இஸ்லாமிய அரசு’ (Islamic State) மற்றும் ‘அல்-கொய்தா’ அமைப்புகள் குறித்த தங்களது 38-வது அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அல்-கொய்தா இயக்கம் சிறிய குழுக்களாக இயங்கி, தற்போது பிராந்திய அளவிலான பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளது. பெரிய அளவிலான அமைப்புகளுக்குப் பதிலாக, சிறிய மற்றும் பரவலாக்கப்பட்ட தற்காலிகக் குழுக்கள் மூலம் தனது நாசவேலைத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அல்-கொய்தாவின் துணை அமைப்பாகச் செயல்பட்டு வரும் ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ (Ansar Ghazwat-ul-Hind) அமைப்புக்கு, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 2025 நவம்பரில் செங்கோட்டைப் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் நேரடித் தொடர்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தகவலுக்கான உறுதியான ஆதாரங்கள் அல்லது தொழில்நுட்ப விவரங்கள் எதையும் அந்த அறிக்கையில் ஐ.நா. குறிப்பிடவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகள் தாக்கல் செய்த தகவல்கள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஐநா கண்காணிப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐ.நா. அறிக்கையின் இந்த வெளியீடு செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.