தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முதல்வர் சி. ஜோசப் விஜய் வசம் உள்ள முக்கிய துறை என்பதால் இந்த விவாதம் அரசியல் ரீதியாக அதிக கவனம் பெற்றுள்ளது.

காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் கேள்வி நேரம் நடைபெறும். அதன் பின்னர் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

குறிப்பாக மாநிலத்தில் நிலவும் சட்டம்–ஒழுங்கு நிலை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, காவல் துறை செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026–27 நிதியாண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 17 முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 43 துறைகள் குறித்த விவாதங்கள் முடிவடைந்துள்ளன.

இன்று உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அரசு தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்படும். காவல் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் விஜய் விரிவான பதிலுரை வழங்க உள்ளார்.

நாளை, செப்டம்பர் 4, கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சட்டசபை மீண்டும் செப்டம்பர் 7 திங்கட்கிழமை கூடுகிறது. அன்றைய தினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விவாதத்திற்கு முதல்வர் பதில் அளித்து, புதிய துறை சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.