அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு சேலம் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாட்டாண்மை கட்டிடம் முன்பு, அப்போது அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

மக்கள் பிரச்சினைகளில் அப்போதைய தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை எனக் கூறி நடைபெற்ற அந்த போராட்டத்தில், சாலை மறியல் செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வழக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி, சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அரசியல்வாதிகளுக்கு ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்று குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதே உத்தரவில், தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் ஏற்று, அவர் மீதான வழக்கையும் ரத்து செய்தது.