நிலவின் மிகப்பெரிய பள்ளம் எப்படி உருவானது? சாங்’இ-6 பாறைகள் தரும் புதிய தடயம்

நிலவின் மறுபக்கத்தில் உள்ள தென் துருவம்–ஐட்கன் பள்ளம், நிலவின் மிகப்பெரிய மோதல் பள்ளமாகக் கருதப்படுகிறது. இந்தப் பள்ளம் உருவான பிறகு, அடுத்தடுத்து நிகழ்ந்த விண்பொருள் மோதல்கள் அதை எவ்வாறு மாற்றின என்பதைச் சீனாவின் சாங்’இ-6 விண்கலம் பூமிக்குக் கொண்டுவந்த பாறை மாதிரிகள் மூலம் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

சுமார் 2,200 கிலோமீட்டர் அகலமும், 10 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழமும் கொண்ட இந்தப் பள்ளம், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய விண்பொருள் நிலவில் மோதியதால் உருவானதாகக் கருதப்படுகிறது. அது நிலவின் மறுபக்கத்தில் இருப்பதால், பூமியிலிருந்து தொலைநோக்கி வழியாக நேரடியாகப் பார்க்க முடியாது. அந்தப் பகுதியைப் பற்றி அறிய, நிலவைச் சுற்றும் விண்கலங்களின் தரவுகளும் அங்கு தரையிறங்கிய ஆய்வுக் கலன்களின் அளவீடுகளும் உதவுகின்றன.

சாங்’இ-6 கொண்டுவந்த மாதிரிகளில் மெக்னீசியம் நிறைந்த இரு வகைப் பாறைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். அவை வெவ்வேறு புவியியல் தோற்றம் கொண்டவை என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. பாறை மாதிரிகளின் ஆய்வு முடிவுகளைச் சாங்’இ-4 கலன் நிலவிலேயே சேகரித்த தரவுகளுடனும், சுற்றுப்பாதையிலிருந்து பெறப்பட்ட தகவல்களுடனும் ஒப்பிட்டு, பள்ளத்தை மாற்றிய முக்கிய மோதல்களின் காலவரிசையை ஆய்வாளர்கள் மீட்டமைத்தனர்.

இந்த ஆய்வு ‘Science Advances’ இதழில் வெளியானது. நிலவின் ஆரம்பகால வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு, அங்கிருந்து கொண்டுவரப்படும் சிறிய பாறை மாதிரிகள்கூட எவ்வாறு உதவுகின்றன என்பதற்கு இந்த ஆய்வு ஓர் எடுத்துக்காட்டு.

— அரசுபார்வை செய்திகள்