சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு நேரடி சரக்குக் கப்பல் சேவை! டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கத் திட்டம்
சென்னை துறைமுகத்திலிருந்து தாய்லாந்தின் ரனோங் துறைமுகத்துக்கு நேரடி கன்டெய்னர் சரக்குக் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை துறைமுக ஆணையமும் டி.சி.ஐ. சீவேஸ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கடல்வழிப் போக்குவரத்துப் பிரிவான டி.சி.ஐ. சீவேஸ், இந்தப் புதிய சேவையை இயக்க உள்ளது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள ‘டி.சி.ஐ. சூர்யா’ சரக்குக் கப்பலின் முதல் வருகை டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையையும் ரனோங் துறைமுகத்தையும் இணைக்கும் இந்தச் சேவை மூலம், இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கும் தாய்லாந்துக்கும் இடையே புதிய கடல்வழி வர்த்தக இணைப்பு உருவாகும். இரு நாடுகளுக்கும் இடையே கன்டெய்னர் சரக்குகளைக் கையாளும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களுக்கு இந்த நேரடி வழித்தடம் கூடுதல் போக்குவரத்து வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— அரசுபார்வை செய்திகள்