உலக ஜூனியர் மகளிர் செஸ்: சவிதா ஸ்ரீ சாம்பியன், நிவேதிதா மூன்றாம் இடம் “

வெனிசுலாவின் கராகஸ் நகரில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான வி.சி. நிவேதிதா மூன்றாம் இடம் பிடித்தார்.

நவம்பர் 18 முதல் 27 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்பட்டன. அதில் 9.5 புள்ளிகள் பெற்ற சவிதா ஸ்ரீ இறுதித் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 7.5 புள்ளிகள் பெற்ற நிவேதிதா மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

இருவரும் ஏழாவது சுற்றில் நேருக்கு நேர் மோதினர். அந்த ஆட்டத்தில் கருப்புக் காய்களுடன் விளையாடிய சவிதா ஸ்ரீ வெற்றி பெற்றார். போட்டி முடிவில் முதல் மூன்று இடங்களில் இரண்டை இந்திய வீராங்கனைகள் பிடித்தனர்.

— அரசுபார்வை செய்திகள்