சத்தீஸ்கரில் இரட்டை என்கவுண்டர்: 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் வனப்பகுதிகளில் இன்று நடந்த இரண்டு என்கவுண்டர்களில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மாவில் 12 பேர், பிஜாப்பூரில் 2 பேர் என மொத்தம் 14 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுக்மா மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் போலீஸார் அதிக எண்ணிக்கையில் அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு தொடங்கினர். பாதுகாப்பு படைகள் பதில்தாக்குதலில் ஈடுபட்டு, அதிரடியான செயல்பாட்டில் 12 நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்றனர். இதில் கோண்டா பகுதி நக்சல் குழு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேடுதல் வேட்டை தொடர்கிறது.
அதேநேரம், பிஜாப்பூர் மாவட்ட வனப்பகுதியிலும் நக்சலைட்டுகள் மறைந்திருப்பதாகத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் அங்கு சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தலாகத் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அவர்களை ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் மட்டும் 285 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த என்கவுண்டர்கள் அந்தப் பிரச்சினைக்கு எதிரான வெற்றியாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இரு என்கவுண்டர்களிலும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குறிப்பிட்ட இழப்பு இல்லை எனவும், தேடுதல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.