புதுடில்லி:
“கர்நாடகாவில் நிலவியுள்ள அரசியல் பிரச்சினைக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசித்துப் பிறகே முடிவு எடுக்கப்படும்,” என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையிலான மோதல் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. டில்லிக்கு சென்ற டி.கே.ஷிவகுமார் ஆதரவாளர்கள், “முதல்வர் மாற்றம்” குறித்து கட்சி தலைமையின் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதே நேரத்தில் இரு தரப்பினரும் டில்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், கார்கே கூறியதாவது:
“கர்நாடக அரசு என்ன செய்கிறது என்பதை அங்குள்ள மக்களே சிறப்பாக கூற முடியும். அங்குள்ள பிரச்சினைகளை நாங்கள் சரிசெய்வோம். ராகுல், சோனியா, நானும் கூடி அமர்ந்து விரிவான ஆலோசனை செய்து முடிவெடுப்போம். தேவையானால் நேரடியாக தலையிட்டு தீர்வு காண்போம்.”
பீஹார் தேர்தல் குறித்து மறுஆய்வு கூட்டம்
பீஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாளை (நவம்பர் 27) மறுஆய்வு கூட்டம் நடைபெறும் என்றும் கார்கே தெரிவித்தார்.
“நாளைய கூட்டத்தில் அனைத்து தகவல்களையும் சேகரித்து, எங்கு என்ன தவறுகள் நடந்தன என்பதை கண்டறிவோம். ஓட்டுத் திருட்டு நடந்தது உண்மை.
எஸ்ஐஆர் செயல்பாட்டில் பல குறைபாடுகள் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் (EVM) கோளாறுகள் இருக்கின்றன; அவை தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்,” என கார்கே வலியுறுத்தினார்.

