சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுக முன்னாள் தலைவர் செங்கோட்டையன் அடுத்ததாக எந்த முடிவை எடுக்கப் போகிறார் என்பது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய பேசுப்பொருளாகியுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே நீண்டநாள் பூசல் நிலவி வந்தது. கட்சியின் முக்கிய முடிவுகளில் செங்கோட்டையனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியால் அவர் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார். பின்னர் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இதையடுத்து, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
த.வெ.க-வில் இணைவாரா?
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், வரும் 27 ஆம் தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதே சூழலில், தனது கோபி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு ராஜினாமா செய்துள்ளார்.
மாற்று கட்சியில் இணையுவதற்கு எம்எல்ஏ பதவி தடையாக இருக்கும் என்பதால், சட்டசபை சபாநாயகர் அப்பாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் நேரடியாக வழங்கினார்.
அடுத்த முடிவு என்ன?
செங்கோட்டையன் அடுத்ததாக எந்த அரசியல் முடிவை எடுக்கப் போகிறார் என்பது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் சூடான பேசுப்பொருளாக மாறியுள்ளது.

