Home » TVK: செங்கோட்டையன் மட்டுமல்ல.. இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த நிர்வாகிகள் யார் யார்?

TVK: செங்கோட்டையன் மட்டுமல்ல.. இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த நிர்வாகிகள் யார் யார்?

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்: விஜய் முன்னிலையில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டது

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று நடிகர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இணைந்த உடனே அவருக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பதவியும் வழங்கப்பட்டது.

செங்கோட்டையனுடன், அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தவெகவில் இன்று சேர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பின்னர் மாலை நேரத்தில் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதும், இன்று காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைவு அதிகாரப்பூர்வமாக நடந்தது.

காலை முதலே பனையூர் அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்தது. செங்கோட்டையன் வருகைக்கு முன்பே தவெக நிர்வாகிகளும் அவரது ஆதரவாளர்களும் வருகை புரிந்தனர். விஜயுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு, பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.

அவருக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள்:

  • தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர்

  • ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர்

செங்கோட்டையனுடன் இணைந்த முக்கிய நிர்வாகிகள்:

  • முன்னாள் எம்.பி சத்யபாமா

  • அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன்

  • நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம்

  • கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன்

  • முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி,

  • அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ். ரமேஷ்

மேலும், புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா ஆகியோரும் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தனர்.

மொத்தம் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *