சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் கவியரசன், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கல்வியைத் தாண்டி தவறான பாதைகளில் கவனம் சிதறுவதுதான் இதற்குக் காரணம். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களை கட்டுப்படுத்துவது சவாலாக மாறியுள்ளது.
எனவே, அனைத்து பள்ளிகளிலும் பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும். மேலும், வாரத்திற்கு குறைந்தது இரண்டு நேரங்கள் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து, ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்து, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக ஒத்துழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.