🏎️ அபுதாபி கிராண்ட்பிரியில் லான்டோ நோரிஸ் சாம்பியன்

அபுதாபி,

பார்முலா 1 கார்பந்தயத்தின் 24-வது மற்றும் இறுதி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி, யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது. பட்டம் வெல்லும் போட்டியில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென், இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ், ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.

306.183 கிலோமீட்டர் தூரப்பந்தயத்தில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர். முதல்வரிசையில் புறப்பட்ட வெர்ஸ்டப்பென் 1 மணி 26 நிமிடம் 7.469 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. ஆனால், சாம்பியன்ஷிப் பட்டம் பெற அது போதவில்லை. நோரிஸ் டாப்-3 இடத்திற்குள் வந்தால் மட்டுமே வெர்ஸ்டப்பென் பட்டத்தை இழக்க வேண்டிய நிலை. இறுதியில் நோரிஸ் 3-வது இடத்தை பிடித்து 15 புள்ளிகளை பெற்றதுடன், சாம்பியன்ஷிப் பட்டத்தையும் உறுதி செய்தார். பியாஸ்ட்ரி 2-வது இடத்தில் வந்து 18 புள்ளிகளை பெற்றார்.

மொத்தம் 24 சுற்றுகள் முடிவில், மெக்லரன் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் 423 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, தனது வாழ்க்கையில் முதல்முறையாக பார்முலா 1 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உணர்ச்சிமிகுதியால் அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 421 புள்ளிகளுடன் 2-வது இடமும், பியாஸ்ட்ரி (மெக்லரன்) 410 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லூயிஸ் ஹாமில்டன் 156 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அணிகளுக்கான சாம்பியன்ஷிப்பில் நோரிஸ், பியாஸ்ட்ரி ஆகியோரின் பங்களிப்பால் மெக்லரன் அணி வாகை சூடியது.

26 வயதான நோரிஸ், “இதை நம்ப முடியவில்லை. நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அழக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை” எனக் கூறினார். பார்முலா 1 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 11-வது இங்கிலாந்து வீரராக நோரிஸ் வரலாற்றில் இடம்பிடித்தார்.