கட்டாக்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடன் அசத்தினார். ஜிதேஷ் ஷர்மா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணியில் நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12.3 ஓவர்களில் 74 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் பிரெவிஸ் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 104 ரன்களில் தடுமாறிய நிலையில், ஆல்-ரவுண்டர் பாண்ட்யா அணியை நிலைநிறுத்தினார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி சிக்சர்களை தெறிக்கவிட்டு, 25 பந்துகளில் தனது 6வது அரைசதத்தையும் நிறைவு செய்தார். கடந்த ஆசிய கோப்பையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்ட்யா, “பிட்ச் சவாலாக இருந்தது. எனவே என் ஷாட்டுகளை ஆதரிக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் தைரியமாக விளையாட வேண்டிய சூழல் இருந்தது. நான் பேட்டிங் செய்த விதத்தில் திருப்தி அடைந்தேன். கடந்த 6–7 மாதங்களில் பிட்னஸ் சிறப்பாக இருந்தது. 50 நாட்கள் என்சிஏவில் கடின உழைப்பை மேற்கொண்டேன். அதன் பலனாக இந்த வெற்றி கிடைத்தது.
ஒரு கிரிக்கெட் வீரராக, என் விருப்பம் முக்கியமல்ல; இந்தியா விரும்புவது முக்கியம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நாட்டிற்காக சிறந்ததை செய்ய முயற்சிக்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்க முயற்சித்துள்ளேன். கேசவ் மகராஜ் பந்துவீச்சை அடிக்க திட்டமில்லை. ஆனால் பந்து என் வட்டத்திற்குள் வந்ததால் அடித்தேன். அது பலனளித்தது. சரியான பவுலர்களை அடையாளம் கண்டு தாக்குவது முக்கியம். அது வேலை செய்தால் நன்றாக தெரியும்” எனக் கூறினார்.