சென்னை,

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், இதற்கான முக்கிய காரணம் திமுக அரசின் அலட்சியமே எனவும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டிய அண்ணாமலை, இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருப்பது மிகுந்த கவலைக்குரியது என தெரிவித்துள்ளார். 2021 முதல் 2024 வரை கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 2,54,526 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. நாட்டின் எந்த மாநிலத்திலும் இத்தனை அதிக விபத்துகள் நிகழவில்லை என்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், தினமும் சராசரியாக 50 பேர் உயிரிழப்பது மிகப்பெரிய மனிதாபிமான சிக்கலாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தரமற்ற சாலைகள், பராமரிப்பு குறைபாடுகள் போன்றவை ஒரு காரணமாக இருந்தாலும், அதைவிட பெரிய காரணம் திமுக அரசின் மது கொள்கை என அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார்.

அவரது பதிவில், “தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வழிவகுக்கும் திமுக அரசின் அலட்சியம் தான் சாலை விபத்துகளின் முக்கிய காரணம்” என அவர் கூறியுள்ளார். கட்டுப்பாடற்ற மது விற்பனை மற்றும் போதைப் பொருள் பரவல் அதிகரித்ததால், சாலை விபத்துகள் பெருமளவில் நடைபெறுகின்றன; இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே என அவர் வலியுறுத்தினார்.

மேலும், திமுக அரசு மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாயையே முக்கியமாகக் கருதுகிறது; பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசு எந்தத் தீர்மானமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

இறுதியாக, “பொதுமக்களின் உயிரை பாதுகாக்க இயலாத இந்த கையாலாகாத திமுக அரசு விரைவில் மக்கள் மனதில் இருந்து தூக்கி எறியப்படும்” என அண்ணாமலை தனது பதிவை முடித்துள்ளார்.