எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படம் – சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல்
சென்னை: இந்திய இசை உலகில் அழியாத தடம் பதித்த கர்நாடக இசை நாயகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஒரு பிரமாண்ட திரைப்படம் உருவாகவுள்ளதாக திரையுலகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தலைசிறந்த பாடகியின் கதாபாத்திரத்தை நடிகை சாய் பல்லவி ஏற்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
1916 செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, சிறுவயதிலேயே இசை உலகில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். வெறும் 10 வயதிலேயே எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். பின்னர் திரைப்படங்களிலும் நடித்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் நான்கு படங்களில் நடித்தார். குறிப்பாக மீரா படம் அவருக்கு தேசிய அளவில் பெரும் புகழை பெற்றுத்தந்தது.
கர்நாடக இசையின் ராணி என போற்றப்பட்ட எம்.எஸ்., இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்றவர். 1954ஆம் ஆண்டு பத்மபூஷன், 1968ஆம் ஆண்டு மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி பட்டம், 1998ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா உள்ளிட்ட பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. சங்கீத கலாநிதி பட்டத்தைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 2004ஆம் ஆண்டு 88 வயதில் அவர் மறைந்தார்.
இந்நிலையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை சினிமாவாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஜெர்ஸி, கிங்டம் போன்ற படங்களை இயக்கிய கௌதம் தின்னூரி இந்த வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக சாய் பல்லவி நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரின் இயல்பான நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு, மற்றும் இசை உணர்வு காரணமாகவே இந்த கதாபாத்திரத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. விரைவில் இந்த பயோபிக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.