உள்ளூர் கிரிக்கெட்டின் பலத்தால் இந்திய அணிக்கு மீண்டும் வந்த இஷான் கிஷன்

மும்பை,

இந்திய டி20 அணியின் முக்கிய விக்கெட் கீப்பர்-பேட்டராக 2023ம் ஆண்டில் விளங்கிய இஷான் கிஷன், 2024 பிப்ரவரியில் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதற்குக் காரணம், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீரர்களுக்கு அனுப்பிய கடிதம். அந்தக் கடிதத்தில், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல முன்னணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளை புறக்கணித்து, அதிக வருமானம் தரும் ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியானது.

அந்த நேரத்தில், இஷான் கிஷன் தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்டில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க விரும்புவதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். ஆனால், அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல், ஹர்திக் பாண்டியாவுடன் பரோடாவில் ஐபிஎல் பயிற்சியில் ஈடுபட்டது பிசிசிஐக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவர் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த சிக்கலுக்குப் பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிய இஷான், உள்ளூர் கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் கடுமையாக உழைத்தார். ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு, துலீப் கோப்பை தொடரில் இந்தியா சி அணிக்காக விளையாடிய அவர், இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் 111 ரன்கள் அடித்து அசத்தினார்.

அவரின் ரன் வேட்டை தொடர்ந்து ஜொலித்தது. ஜார்க்கண்ட் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், 2025 சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அணியை வெற்றிக்குத் தலைமையேற்றார். ஜார்க்கண்ட் அணி வென்ற முதல் சையது முஷ்டாக் அலி கோப்பை இதுவே.

கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்டராகவும் அவர் பிரகாசித்தார். அந்த தொடரில் 10 போட்டிகளில் 517 ரன்கள் குவித்தார். சராசரி 57.32, ஸ்டிரைக் ரேட் 197.32 என்ற அபாரமான புள்ளிவிவரங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தின.

இந்த சாதனைகள், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடத்தை உறுதி செய்தன. “டி20 அணியைத் தேர்வு செய்யும்போது இஷான் கிஷனை தவிர்க்க முடியாது” என்ற உண்மையை தனது திறமையால் நிரூபித்துள்ளார்.

இஷான் கிஷனின் இந்த கம்பேக், உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி திறமையை நிரூபித்தால், சர்வதேச அணியில் மீண்டும் இடம் பெற முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக அவர் திகழ்கிறார்.