சென்னை:

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா நாளை மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள், மரியாதை செலுத்தும் விழாக்கள், மற்றும் பொதுமக்களுக்கான உதவித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். அவர் வருகை தரும் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டமாக வரவேற்கத் தயாராகியுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலில் மறைந்த முன்னாள் தலைவர்களான எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்குவார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, அந்த ஆண்டின் பிறந்தநாள் எண்ணிக்கையை குறிக்கும் வகையில் கேக் தயாரித்து தலைமை அலுவலகத்தில் வெட்டுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 78வது பிறந்தநாளாக இருப்பதால் 78 கிலோ கேக்கை வெட்டும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவிற்குப் பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஏழை மற்றும் தேவைப்படும் மக்களுக்கான பல நலத்திட்ட உதவிகளும் நாளை வழங்கப்பட உள்ளன.

அதே நேரத்தில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் சாத்தியமும் உள்ளது.

இன்னும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவடையவில்லை என்றாலும், அதிமுக முன்னணி தலைவர்கள் போட்டியிட உள்ள சில முக்கிய தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விவரங்களை ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி நாளை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என கட்சித் தரப்பில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதனால், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தலைமையகத்தில் அரசியல் பரபரப்பும், உற்சாகமும் நிலவுகிறது.