சென்னை:
தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தியிருப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ள அன்புமணி இராமதாஸ், இது மக்களைச் சுரண்டும் “பகல் கொள்ளை” எனக் கண்டித்துள்ளார்.

தற்போது, ஆவின் நிறுவனத்தில் 3% கொழுப்பு சத்து கொண்ட நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.62 வரை விற்பனை செய்து வருகின்றன. இதனால், ஆவின் பாலுடன் ஒப்பிடும்போது லிட்டருக்கு ரூ.22 கூடுதலாக விலை வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 4.5% கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பால் ஆவினில் ரூ.44 என விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.68 வரை விலை நிர்ணயித்துள்ளன. மேலும், 6% கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பால் லிட்டருக்கு ரூ.60 ஆக இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் அதே பாலுக்கு ரூ.76 வரை வசூலிக்கின்றன.
இதன் அடிப்படையில், தனியார் நிறுவனங்களில் நீல மற்றும் பச்சை உறை பால்களின் விலை ஆவின் பாலைவிட சுமார் 55 சதவீதம் அதிகமாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். “தனியார் நிறுவனங்களில் 2 லிட்டர் பாலை வாங்கும் தொகையில், ஆவினில் 3 லிட்டர் பாலை வாங்க முடிகிறது. இது மக்கள் மீது நேரடி கொள்ளையாகும். திமுக அரசு இதை தடுக்காமல் கண்ணை மூடி காணாமல் இருப்பது மக்களுக்கு துரோகம்,” என அவர் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
அன்புமணி மேலும் கூறியதாவது: “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலை இது எட்டாவது முறை உயர்த்தப்படுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் பால் விலை 55 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. மக்களைச் சுரண்டி அதிக லாபம் பெற தனியார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதற்கு திமுக அரசு மௌனமாக துணை நின்று வருகிறது,” என்றார்.
மேலும், பால் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். “முதலாவதாக, பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து, தனியார் நிறுவனங்களின் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயிக்க வேண்டும். இரண்டாவதாக, ஆவின் பால் நிறுவனத்தின் சந்தைப் பங்கை உயர்த்தி, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்,” என பரிந்துரைத்தார்.
“தமிழகத்தில் பால் சந்தையின் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆவின் பங்கைக் 50 சதவீதமாக உயர்த்தினால் மட்டுமே தனியார் விலைப் பெருக்கை தடுக்க முடியும். இதற்காக தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும்; இல்லையெனில் மக்கள் திமுக அரசை கடுமையாக தண்டிப்பார்கள்,” என அன்புமணி எச்சரித்தார்.