சென்னை:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலக அரங்கில் பெருமைமிக்க நிலையை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் இஸ்ரேல் நாடாளுமன்றம் வழங்கிய உயரிய ‘நெசெட் சபாநாயகர் பதக்கம்’ விருதைப் பெற்றுள்ளார். இது உலகத் தலைவர்களிடையே மிகுந்த மரியாதையுடன் கருதப்படும் விருதாகும். இதற்கு முன்னர், 2018ஆம் ஆண்டு பாலஸ்தீனம் சென்றபோது, அந்நாட்டு உயரிய ‘பாலஸ்தீன் மாநிலத்தின் கிராண்ட் காலர்’ என்ற விருதும் வழங்கப்பட்டது,” என அவர் நினைவூட்டினார்.

அவர் தொடர்ந்தும் கூறியதாவது: “இரு விருதுகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அரசியல் ரீதியாக பல ஆண்டுகளாக எதிர்மறை உறவுகளை கொண்ட நாடுகள். ஆனால் இந்நிலையிலும், இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் ஒரே தலைவராகிய நமது பிரதமர் நரேந்திர மோடி பெற்றிருப்பது, இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளும் பிரதமரின் உலகளாவிய செல்வாக்கும் எவ்வளவு வலிமையானவை என்பதற்கான சான்றாகும்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: “பிரதமர் மோடி அவர்கள் உலக நாடுகளுடன் நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் மதிப்பும் மரியாதையும் உலக அரங்கில் பெரிதும் உயர்ந்துள்ளது. உலகத் தலைவர்கள் அவரை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் அணுகுகிறார்கள். இது இந்தியாவின் சர்வதேச மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடியை ‘விஸ்வகுரு’ என்று அழைப்பது முழுமையாக பொருத்தமானது,” எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இன்று உலக நாடுகளால் பெருமையுடன் பாராட்டப்படும் ஒரு வலிமையான தேசமாக உருவெடுத்திருப்பதை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.