உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு, Apple நிறுவனம் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் செல்போன் மற்றும் கணினி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உலகின் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாகவும் ஆப்பிள் திகழ்கிறது. குறிப்பாக, வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு விவகாரத்தில், ஆப்பிள் கடுமையான கொள்கைகளை பின்பற்றும் நிறுவனமாக அறியப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கையில், பழைய பதிப்பிலான Google Chrome மற்றும் பிற அப்டேட் செய்யப்படாத இணைய உலாவிகள் (browsers) பயன்படுத்துவது, பயனர்களுக்கு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்காத இந்த வகை பிரவுசர்கள், ஹேக்கிங், தரவு திருட்டு மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த இணைய உலாவியான Safari பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், டிராக்கிங் கட்டுப்பாடுகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதாகவும் ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள், குரோம் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு பிரவுசர்களை பயன்படுத்தும் போது அவற்றை எப்போதும் சமீபத்திய பதிப்புக்கு (latest version) அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகையில், பாதுகாப்பு அப்டேட்கள் பெறாத எந்தவொரு செயலியும் (app) அல்லது பிரவுசரும் சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். எனவே, பயனர்கள் தங்கள் மொபைல் மற்றும் கணினிகளில் உள்ள செயலிகள் மற்றும் இணைய உலாவிகளை அடிக்கடி புதுப்பித்து பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த எச்சரிக்கை, டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் பயனர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.