அரியலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
அரியலூர் மாவட்டம் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஆடி திருவாதிரை மற்றும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ளார்.
மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க உலகப்புகழ் பெற்ற அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது. சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் பெருமையை பறைசாற்றும் இந்த ஆன்மீக மற்றும் வரலாற்றுத் தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் இந்த விழாவில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆடி திருவாதிரை விழா மற்றும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் விழாவில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையிலும், விழாவின் ஏற்பாடுகளைத் தடையின்றி மேற்கொள்ளும் வகையிலும் அரியலூர் மாவட்டம் முழுமைக்கும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தை ஈடுகட்டும் வகையில், மற்றொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குப் பதிலாக வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பணி நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறை அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குப் பொருந்தும். இருப்பினும், அவசர காலப் பணிகளில் ஈடுபடும் அத்தியாவசியத் துறைகள் மற்றும் கருவூலங்கள் போன்ற சில குறிப்பிட்ட துறைகள் மட்டும் வழக்கம்பேலச் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் புகழைப் போற்றும் வகையில் நடைபெறும் இந்த அரசு விழாவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் அறநிலையத்துறை இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.