அர்ஜுன் தாஸ், சாண்டி நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்படத் துறையில் பல பிரம்மாண்ட படங்கள் உருவாகி வந்தாலும், சூப்பர் ஹீரோ படங்கள் மிகக் குறைவாகவே உருவாகியுள்ளன. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்த ‘மின்னல் முரளி’ வெற்றி பெற்றதையடுத்து, இப்படிப்பட்ட முயற்சிகள் தென்னிந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம், அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய சூப்பர் ஹீரோ படத்தை தயாரிக்கிறது. படத்தை விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகை தேஜு அஷ்வினி, நகைச்சுவை நடிகர் சாண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு ஆகியவற்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இசையை ஹேஷம் அப்துல் வஹாப் அமைக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என குழுவினர் தெரிவித்துள்ளனர். இது ஒரு சூப்பர் ஹீரோ கதையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் ஆவலும் உருவாகியுள்ளது.

