ஆஷஸ் 3-வது டெஸ்ட் – ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோல்வி, தொடரில் 3-0 முன்னிலை
அடிலெய்டு: ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த இங்கிலாந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து 85 ரன்கள் பின்தங்கியது. இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 271/4 என்ற நிலையில் 3-வது நாள் முடித்தது. டிராவிஸ் ஹெட் 142 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பவுலர்கள் தாக்குதலை அதிகரித்தனர். ஹெட் 170 ரன்களிலும், கேரி 72 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் ஆஸ்திரேலியாவின் கீழ்தட்டு பேட்ஸ்மேன்கள் விரைவில் சரிந்ததால், 349 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 435 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் களமிறங்கினர். ஆனால் டக்கெட் 4 ரன்களிலும், ஆலி போப் 17 ரன்களிலும் அவுட் ஆனதால் அணி சிரமத்தில் சிக்கியது. ஜோ ரூட் (39) மற்றும் கிராவ்லி இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். ரூட்டை கம்மின்ஸ் 13-வது முறையாக டெஸ்டில் வீழ்த்தினார். கிராவ்லி 85 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 30 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும் அவுட் ஆனனர்.
4-வது நாள் முடிவில் இங்கிலாந்து 207/6 என்ற நிலையில் இருந்தது. 5-வது நாள் ஜாமி சுமித் (60) மற்றும் வில் ஜாக்ஸ் (47) சிறப்பாக ஆடியும், நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர் வந்த வீரர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் அவுட் ஆனனர்.
இறுதியில், 102.5 ஓவர்களில் இங்கிலாந்து 352 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது.
இந்த வெற்றியால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.