மெல்போர்ன் டெஸ்ட் – 2-வது நாளிலும் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் ஜோஷ் டங் மற்றும் அட்கின்சனின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஹெட் 12, வெதரால்ட் 10, லபுஸ்சேன் 6, ஸ்மித் 9 ரன்னில் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட், அட்கின்சன் 2 விக்கெட், ஸ்டோக்ஸ் மற்றும் கார்சே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. ஆனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் மிரட்டல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அணி தடுமாறியது. ஹாரி புரூக் மட்டும் 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் நெசர் 4 விக்கெட், போலந்த் 3 விக்கெட் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா 42 ரன்கள் முன்னிலை பெற்றது. முதல் நாள் முடிவில், ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணியினர் மீண்டும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். டிராவிஸ் ஹெட் (46), ஸ்மித், கிரீன் ஆகியோரைக் தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் ஆஸ்திரேலியா 34.3 ஓவர்களில் 132 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கார்சே 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

பிட்ச் விவாதம்

மெல்போர்ன் மைதானத்தில் உள்ள விக்கெட் பிட்சில் வழக்கத்தை விட அதிகமாக புற்கள் (10 மில்லிமீட்டர்) உள்ளன. இதனால் பந்து தாறுமாறாக திரும்பி, பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாடுவதில் சிரமம் அடைகின்றனர். முன்னாள் வீரர்கள், பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்து வருகின்றனர். முற்றிலும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிட்ச், டெஸ்ட் போட்டிக்கான தரநிலைக்கு ஏற்றதல்ல என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.