மனிதநேயம் இன்னும் சாகல! சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட வடமாநில சிறுமியை விழிப்புடன் மீட்ட ஆட்டோ ஓட்டுநர் முருகன்: டிஜிபி நேரில் பாராட்டு மற்றும் வெகுமதி!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியே நள்ளிரவில் கடத்தப்பட இருந்த வடமாநில சிறுமியை, தனது சமயோசித புத்தியாலும் சமூகப் பொறுப்புணர்வாலும் மீட்ட ஆட்டோ ஓட்டுநர் முருகனின் தீரச் செயலை பாராட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நேரில் அழைத்து பாராட்டு கடிதமும், வெகுமதியும் வழங்கி கௌரவித்துள்ளார்.
விவசாய கூலி வேலைக்காகச் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, 2 மகன்கள் மற்றும் 2 மகள்களுடன் தங்களது சொந்த மாநிலத்திலிருந்து திருச்சி மாவட்டத்திற்கு ஒரு ஏழைக் குடும்பம் வந்திருந்தது. அங்கு வேலை முடிவடைந்தவுடன், கடந்த ஜூலை 1-ஆம் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டு, தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய ரயில் ஜூலை 2-ஆம் தேதி காலைதான் புறப்பட இருந்தது. இதனால், வேறு வழியின்றி அந்த குடும்பத்தினர் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் இரவு தங்கியிருந்தனர்.
நள்ளிரவில் நடந்த கடத்தல் முயற்சி:
கடந்த ஜூலை 2-ஆம் தேதி அதிகாலை சுமார் 3.00 மணியளவில், தந்தை திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது, தன்னருகில் உறங்கிக் கொண்டிருந்த தனது இளைய மகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு சிறுமியைச் சுற்றியுள்ள பல இடங்களில் தேடத் தொடங்கினர்.
அதே நேரத்தில், சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் முருகன் என்ற ஓட்டுநர், ஒரு மர்ம நபர் அந்த சிறுமியைத் தனியாக அழைத்துச் செல்வதைக் கவனித்தார். நள்ளிரவு நேரம் என்பதாலும், சிறுமியும் அந்த நபரும் வெவ்வேறு மொழிகளில் பேசிக் கொண்டிருந்ததாலும் ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அந்த நபரின் நடவடிக்கைகளும் சந்தேகப்படும்படியாக இருக்கவே, முருகன் உடனடியாக பாய்ந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தித் தீவிர விசாரணை நடத்தினார்.
சிக்கிய கடத்தல்காரன்:
முருகன் கேட்ட கேள்விகளுக்கு அந்த நபர் முன்னுக்குப் பின் முரணான, திருப்தியற்ற பதில்களையே கூறினார். இதனால் அவர் குழந்தையைக் கடத்திச் செல்கிறார் என்பதை உறுதி செய்த ஆட்டோ ஓட்டுநர் முருகன், பொதுமக்களுக்கான பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அச்சிறுமியை அவரிடமிருந்து பாதுகாப்பாக மீட்டார். மேலும், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் உடனடியாக தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியைப் பத்திரமாக மீட்டு, அழுதுகொண்டிருந்த பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், குழந்தையை இழுத்துச் சென்ற நபரைப் பிடித்து பெரியமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (45) என்பதும், அவர் அந்த சிறுமியைத் திட்டமிட்டு கடத்த முயன்றதும் அம்பலமானது.
டிஜிபி பாராட்டு மற்றும் வழக்குப்பதிவு:
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சென்னை ஜி2 (G2) பெரியமேடு காவல் நிலையத்தில் கடத்தல் பிரிவின் கீழ் (குற்ற எண் 159/2026, பிரிவு 137(2)) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சசிகுமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் காட்டுத்தீயாகப் பரவி ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவியத் தொடங்கின. இந்த நிலையில், ஒரு பெரிய குற்றத்தைத் தடுத்து நிறுத்தி, ஒரு சிறுமியின் வாழ்க்கையைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் முருகனின் விழிப்புணர்வு, தைரியம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்துறை தலைவர் (DGP) அவரைத் தலைமை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
முருகனின் இந்த துரிதமான நடவடிக்கை மற்றும் பொது நல அக்கறை, பொதுமக்களின் விழிப்புணர்வும் காவல்துறையினரின் ஒத்துழைப்பும் இணைந்தால் சமூக பாதுகாப்பை எப்படி வலுப்படுத்தலாம் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது எனப் போலீஸ் தரப்பில் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.