🎭 “என்னை வாழ விடுங்கள்” – பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் வேதனை பதிவு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், 2017 பிப்ரவரி 17ஆம் தேதி நடந்த சம்பவம் மலையாள திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்தது.

இந்த சம்பவம் குறித்து நடிகை உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். மாநில குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் உள்பட சிலரை கைது செய்தனர். பின்னர், நடிகர் திலீப்புக்கும் பாதிக்கப்பட்ட நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி இந்த வன்கொடுமை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், திலீப்புக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்தது. அதேபோல் அவரது நண்பர் சரத் என்பவரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து வதந்திகள் பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை சமூக வலைதளத்தில் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனக்கு எதிராக பாலியல் குற்றம் நடந்த பிறகு உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தது மிகப்பெரிய தவறு என நினைக்கிறேன். நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும். யாரிடமும் எதுவும் சொல்லாமல், நடந்ததை விதி என ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். பிறகு வீடியோ வெளியாகியதும், புகார் அளிக்காத என்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் நான் உயிரை மாய்த்திருக்க வேண்டும்” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வீடியோ எடுத்த குற்றவாளி சிறைக்கு செல்லும் முன், நான்தான் உங்களை நிர்வாணமாக வீடியோ எடுத்தேன் எனச் சொல்லியிருக்க வேண்டும். இவ்வாறான வக்கிரமான தகவல்களைப் பரப்புபவர்கள், அதை நம்பி பேசுபவர்கள் – உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதுபோல் நடக்கக் கூடாது. நான் பாதிக்கப்பட்ட பெண்ணாக அல்ல, ஒரு சாதாரண மனிதனாகச் சொல்கிறேன். என்னை வாழ விடுங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.