புதுடில்லி: புதிய ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற உத்தரவைப் பற்றி பரவிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இது கட்டாயமல்ல என்றும், பயனாளர்கள் விருப்பப்படி செயலியை பயன்படுத்தலாம் என்றும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
ஆன்லைன் மோசடிகள், ஸ்பாம் அழைப்புகள், மற்றும் போலி எண்களைத் தடுப்பதற்காக, புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்பே நிறுவ வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து, “மொபைல் பயனாளர்களை உளவு பார்க்க இது ஒரு வழி” என குற்றஞ்சாட்டினர்.
இந்த சர்ச்சை மேலும் பரவிய நிலையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா செய்தியாளர்களுக்கு பேசியபோது முக்கிய விளக்கத்தை வழங்கினார்.
அவர் கூறியதாவது:
“சஞ்சார் சாத்தி செயலி உங்கள் விருப்பப்படி பதிவிறக்கம் செய்யக்கூடியது. அதை கட்டாயப்படுத்தும் நிலை இல்லை. செயலியை அறிமுகப்படுத்துவது எங்களின் பொறுப்பு. ஆனால் அதை பயன்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதை முழுமையாக பயனாளர்களே முடிவு செய்கிறார்கள்.”
அதே நேரத்தில், ஆன்லைன் மோசடிகளை குறைப்பதற்கு இந்த செயலி உதவுவதாகவும், பல்வேறு துயரத்தை அனுபவிக்கும் பயனாளர்களுக்கு பாதுகாப்பை உயர்த்தும் தொழில்நுட்பம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசு இதை உருவாக்கியதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதனால் சஞ்சார் சாத்தி செயலியை மொபைலில் வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதும், இதை பயன்படுத்துவது முற்றிலும் தனிநபர் விருப்பம் என்பதும் அரசு நிலைப்பாடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.