மேற்கு வங்காளத்தை கைப்பற்ற அமித்ஷா முயற்சிக்கிறார்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா:

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணிச்சுமை அதிகரித்ததால், திருத்தப்பணியில் ஈடுபட்ட சில அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
“தேர்தல் அருகில் வருவதால், மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெறுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு அமித்ஷாதான் காரணம். எந்த விலையையும் கொடுத்து மேற்கு வங்காளத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவரது நோக்கம். ஆனால் அதற்கு மக்கள் உரிய பதிலடி அளிப்பார்கள்.

இவ்வாறு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை பயன்படுத்திக் கொண்டு, பாஜக மேற்கு வங்காளத்தில் தன் சொந்த அரசியல் சவக்குழியையே தோண்டிக்கொண்டு வருகிறது. மேற்கு வங்காளம், பீகார் அல்ல,” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.