புது டெல்லி: ஓஎஸ்எம் முறை குறித்து எழுந்துள்ள புகார்கள் காரணமாக, சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலரை மத்திய அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் குழுவையும் அரசு அமைத்துள்ளது.
சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓஎஸ்எம் முறை காரணமாக மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.
வேதாந்த் என்ற ஒரு மாணவர் மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் கோரி இருந்த நிலையில், அவருக்கு வேறொருவரின் விடைத்தாள் கொடுக்கப்பட்டது குறித்து சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது சமூக ஊடகக் கணக்கு பாக்கிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், வேதாந்த் உள்ளிட்ட சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஓஎஸ்எம் முறையில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஒரு நபர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரான எஸ்.ராதா சவுகான் தலைமை தாங்குவார். பிற அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் உதவியைப் பெறும் அதிகாரம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்குத் தேவையான செயலக உதவிகளை சிபிஎஸ்இ வழங்கும் எனவும், இவ்விவகாரம் குறித்த அறிக்கையை முப்பது நாட்களுக்குள் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் இக்குழு சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங் முறை என்றால் என்ன? மாணவர்கள் விடைத்தாள்களை ஆசிரியர்கள் கையால் திருத்துவதற்குப் பதிலாக அந்த விடைத்தாள்களின் ஸ்கேன் காப்பிகளை கணினியில் பார்த்து மதிப்பீடு செய்யும் முறையாகும். மதிப்பீடு செய்யும் முறைதான் மேனுவலில் இருந்து கணினி வழியாக மாறுகிறதே தவிர மதிப்பெண் வழங்கும் முறையும், மதிப்பீட்டு விதிகளும் அதேநிலையில் தான் தொடர்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்படி முதலில் மாணவர்களின் விடைத்தாள்கள் முதலில் ஸ்கேன் செய்யப்படுகிறது. ஸ்கேன் செய்யும்போது மாணவர்களின் அடையாளம் தெரியாதவண்ணம் ரகசியம் காப்பது உறுதி செய்யப்படுகிறது. பின்னர் அந்த ஸ்கேண்டு விடைத்தாள் பிரதி பல்வேறு பிராந்தியங்களிலும் நியமிக்கப்பட்ட பல்வேறு மதிப்பீட்டாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பகிரப்படுகிறது.
இவ்வாறாக ஆன்லைனில் விடைத்தாள் திருத்துவது என்பது துல்லியத் தன்மையை உறுதி செய்யும். கூட்டல் மற்றும் அட்டவணைப்படுத்தல் பிழைகளைக் குறைப்பதன் மூலம், மதிப்பிடுவதில் துல்லியத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்தும். இதுவே, இந்த முறையின் நோக்கம் என்று சிபிஎஸ்இ கூறுகிறது.
ஆனால், ஓஎஸ்எம் முறைப்படி மதிப்பெண் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டதில் அதன் பிரதிகள் மங்கலாக உள்ளதாகவும், சில விடைகள் சரிபார்க்கப்படாமல் விடப்பட்டதாகவும், இணையதளம் செயலிழப்பதாகவும், கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாகவும், மறுமதிப்பீட்டு செயல்முறையிலும் குழப்பங்கள் இருப்பதாகவும் சிபிஎஸ்இ முறையில் பிளஸ் ஓகே தேர்வெழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த முறை காரணமாக பல மாணவர்களின் மதிப்பெண் குறைந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.