திஸ்பூர்:
அசாம் மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத மாற்றம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த மூத்த தலைவர் பிரதியுத் பர்டோலாய், திடீரென தனது கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

1975ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த பிரதியுத் பர்டோலாய், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும், மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பிய அவர், காங்கிரசில் தன்னை அவமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது இந்த முடிவை மாற்ற மாநில காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்தாலும் அது பலனளிக்கவில்லை. தொடர்ந்து, அவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவரின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் தன்னை மதிக்கவில்லை என்றும், அதனால் தான் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரை கட்சியில் வரவேற்ற முதலமைச்சர், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கட்சி மாறிய அதே நாளிலேயே பிரதியுத் பர்டோலாய்க்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவர் திஸ்பூர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் கட்சி மாறி தேர்தல் சீட் பெறுவது அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
மேலும், பிரதியுத் பர்டோலாயின் மகனும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் போட்டியிலிருந்து விலகியிருப்பதும் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கட்சி மாற்றம் மற்றும் உடனடி சீட் வழங்கல், அசாம் அரசியலில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.