கடலூர்:
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சித்தப்பா மகனும் விவசாயியுமான ராமகிருஷ்ணன் (36) ஆகிய இருவரும் தங்களது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென பாலகிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. தன் கண் முன்பே சகோதரன் தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன், உடனடியாகக் குறுக்கிட்டு அவர்களைத் த தடுக்க முயன்றார்.
ஆனால், அந்த வெறிபிடித்த கும்பல் ராமகிருஷ்ணனையும் விட்டுவைக்காமல் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரான ராமகிருஷ்ணன் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராமகிருஷ்ணனை மீட்டுச் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணனும் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். உறவினர்களை உள்ளே அனுமதிக்கக் காவல்துறையினர் மறுத்ததால், அங்கு போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா நேரில் சென்று கொலை நடந்த இடத்தையும், அவர்களது வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்யத் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகின. கொல்லப்பட்டவர்களுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கனகசபை என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்து மற்றும் நிலத்தகராறு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாகவே ஆத்திரமடைந்த கும்பல் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த 5 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக அடுத்தடுத்து இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.