சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் கணேசபுரத்தில் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்மட்ட ரெயில்வே மேம்பாலப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலவரத்தைக் கேட்டறிந்த அவர், எஞ்சியுள்ள வேலைகளைக் காலதாமதமின்றி விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

62 சதவீதப் பணிகள் நிறைவு: இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், கணேசபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த ரெயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 62 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் தூண்களுக்கான அடித்தளமான பைல்கள் (Piles), பைல் கேப்கள் (Pile Caps) மற்றும் பிரம்மாண்ட தூண்கள் (Pillars) அமைக்கும் பணிகள் ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

பாலத்தின் அடுத்தகட்ட பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக, கடந்த ஜூன் 22-ம் தேதி (22.06.2026) முதல் கணேசபுரம் சுரங்கப்பாதையில் போக்குவரத்து முழுமையாக மாற்றியமைக்கப்பட்டது. தற்போது ரெயில்வே பகுதியில் பியர் கேப் (Pier Cap) மற்றும் இரும்பு உத்திரங்கள் (Steel Girders) நிறுவுவதற்கான அடித்தளப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாலத்தின் முக்கியப் பகுதியான ரெயில்வே தண்டவாளங்களுக்கு மேலே அமையவுள்ள இரும்பு உத்திரங்களைத் தயாரிக்கும் பணிகள் தொழிற்சாலையில் இறுதி வடிவத்தை எட்டியுள்ளன.

ரெயில்வே துறை மற்றும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO – Research Designs and Standards Organization) ஆகியவற்றின் முறையான களஆய்வு மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இரும்பு உத்திரங்கள் அனைத்தும் நேரடியாகப் பணியிடத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளன. பின்னர், ரெயில்வே பாதுகாப்புத் துறையின் நேரடி மேற்பார்வையில் அவை பாலத்தின் தூண்களுக்கு மேலே வெற்றிகரமாக நிறுவப்பட உள்ளன.

மழைநீர் தேங்குவதைத் தடுக்கப் புதிய திட்டம்: ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் பெருமளவில் தேங்கி, வடசென்னை மக்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மேம்பாலப் பணிகளோடு சேர்த்து சுரங்கப்பாதை அருகில் மழைநீர் தேங்குவதைத் தவிர்ப்பதற்காகப் புதியதாக இரண்டு அதிநவீன மழைநீர் சேகரிப்பு கிணறுகள் (Rainwater Harvesting Wells) அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகள் (Tenders) தற்போது பெறப்பட்டுப் பரிசீலனையில் உள்ளன. இந்த ஒப்பந்த நடைமுறைகள் இன்னும் சில தினங்களில் இறுதி செய்யப்பட்டவுடன், கிணறுகள் அமைக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்ட ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்களுக்குக் கூடுதல் சிரமம் ஏற்படாத வண்ணம் பணிகளைத் திட்டமிட்டு, இரவு பகலாக விரைந்து முடிக்குமாறு பொறியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், வடசென்னை பகுதியின் மிக முக்கியப் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.