சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் பிப்ரவரி 7, 2026 அன்று நடைபெறவுள்ளன. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக கலைப் பண்பாட்டு துறையின் தமிழ்நாடு சகவர் சிறுவர் மன்றம் சார்பில் இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 05 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களின் மறைந்துள்ள கலைத்திறன்களை வெளிக்கொணரும் நோக்கில், குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகள் மூன்று வயது பிரிவுகளாக — 5 முதல் 8, 9 முதல் 12, மற்றும் 13 முதல் 16 — பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மேலும், 9–12 மற்றும் 13–16 வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அங்கு வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

முதற்கட்டமாக, சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்ரவரி 7, 2026 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600028 இல் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளி முகவரி ஆகிய விவரங்களை கொண்டு வர வேண்டும். பங்கேற்பு சான்றிதழ்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன. பரதநாட்டியம் பிரிவில், பாரம்பரிய நடனங்கள் — பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் — ஆட அனுமதி உண்டு. முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் ஆட வேண்டும். மேற்கத்திய நடனம், திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதிக்கப்படாது. குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாடலாம்.

கிராமிய நடனப் பிரிவில், தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நாட்டுப்புற நடனங்கள் ஆட அனுமதி உண்டு. முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் ஆட வேண்டும். மேற்கத்திய நடனம், திரைப்பட நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதிக்கப்படாது. நேரம் 3 முதல் 5 நிமிடங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரலிசை பிரிவில், கர்நாடக இசை, தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு. மேற்கத்திய இசை, திரைப்படப் பாடல்கள், பிறமொழி பாடல்கள் மற்றும் குழு பாடல்கள் அனுமதிக்கப்படாது. பாடல்களின் நேரம் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

ஓவியப் பிரிவில், 40 x 30 செ.மீ அளவுள்ள சவகர் சிறுவர் மன்றம் வழங்கும் ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், க்ரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர் உள்ளிட்ட எந்தவொரு முறையிலும் ஓவியங்கள் வரையலாம். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான வண்ணங்கள், தூரிகைகள் போன்றவற்றை தாங்களே கொண்டு வர வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனித்தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 044–28192152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.