டிட்வா புயல்: இலங்கை மக்களின் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியது – ஐ.நா. அறிவிப்பு
கொழும்பு: வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையை கடுமையாக தாக்கி, அந்நாட்டின் பல மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழையால் பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலின் தாக்கத்தால் 638 பேர் உயிரிழந்ததோடு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 193 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்த பேரழிவால் சுமார் 18 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 53 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசு சார்பில் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை அரசுக்கு, இந்த நிதியுதவி அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும். இதன் மூலம் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபை ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிரான்ச் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஐ.நா. சபை மற்றும் பிற மனிதாபிமான கூட்டாளிகள் இணைந்து இலங்கைக்கான மனிதநேய முன்னுரிமை திட்டத்தை (Humanitarian Priority Plan – HPP) தொடங்கியுள்ளோம். இதன்படி கல்வி, உணவு பாதுகாப்பு, விவசாயம், ஊட்டச்சத்து, குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட துறைகளில் உடனடி உயிர்காக்கும் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.
இலங்கையில் சுமார் 25 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். டிட்வா புயல் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களை கடுமையாக தாக்கியுள்ளது. சுமார் 4 லட்சத்து 62 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியின் நடுவே ஏற்பட்ட இந்த பேரழிவு, இலங்கை மக்களின் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபை, இலங்கைக்கான மனிதநேய பாதுகாப்புத் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்பை வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் ரூ.85 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் மாதங்களில் ரூ.231 கோடி நிதியை திரட்டும் திட்டம் ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.